மனிதன் ஒரு கூட்டுப் பிராணி. சமூகத்துடன் கூட்டாக வாழ்வதையே விரும்புபவன். மற்ற மனிதர்களின் தொடர்பில்லாமல் தனிமையில் வாழ வேண்டும் என எந்த ஒரு மனிதனும் எண்ணுவதில்லை. தனது தனிமையை தவிர்ப்பதற்காக திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று சமூகத்துடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறான்.
அனைத்து மனிதர்களும் திருமணத்தை விரும்பவே செய்கிறார்கள் என்றிருந்தாலும் துறவறம் என்ற பெயரில் யாரும் திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது.
ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுவதோடு, திருமணத்தைப் புறக்கணித்து துறவி வேடமிடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஒரு முஸ்லிம் இறைவனை வழிபடுவதைக் காரணம் காட்டிக் கூட திருமணத்தைப் புறக்கணிக்க இயலாது.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர், “(இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப் போகிறேன்” என்றார். இன்னொருவர், “நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
புகாரி 5063
ஒரு நபித்தோழர் முழுக்க முழுக்க இறைவனை வணங்கி வழிபடுவதற்காக திருமணம் செய்யவே மாட்டேன் என்கிறார். இதைக் கண்ட நபியவர்கள் ஆஹா… பேஷ்… பேஷ் என்று பாராட்டாமல் இதை கண்டிக்கின்றார்கள். தான் திருமணம் செய்துள்ளதாகவும் தனது வழிமுறையை புறக்கணிப்பவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்து திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றார்கள்.
இறை வணக்கத்தில் ஈடுபடுவதை காரணம் காட்டிக்கூட திருமணத்தை புறக்கணிக்க இயலாது எனும் போது வேறெந்த காரணத்திற்காகவும் திருமணத்தை புறக்கணிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது என்பதை அறியலாம்.
திருமணம் ஓர் கேடயம்
குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவர்கள் காலம் தாழ்த்தாமல் திருமணத்தை செய்து விட வேண்டும், அதுவே அவர்களை மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டும் தடுக்கும் கேடயமாக திகழும் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நானும் அல்கமா மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கüடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்கüடம் “இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் யஸீத்,
நூல் : புகாரி 5066
திருமணம் என்பது தீமைகளிலிருந்து காக்கும் ஓர் பாதுகாப்பு கருவி என நபியவர்கள் கூறியுள்ளதை காணலாம்.
திருமணம் ஓர் மன அமைதி
பல்வேறு காரணங்களால் நிம்மதியை இழந்து, மனஅமைதியை தொலைத்து தவிக்கும் ஆண்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, இழந்த மன அமைதியை திரும்ப பெறுவதற்காக திருமணமே மிகச் சிறந்த வழி என இறைவன் கூறுகிறான்.
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ فَلَمَّا أَثْقَلَتْ دَعَوَا اللَّهَ رَبَّهُمَا لَئِنْ آتَيْتَنَا صَالِحًا لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ
“அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 7:189
ஒருவரின் கட்டுப்பாடான, நிம்மதியான வாழ்க்கைக்கு திருமணம் வழிவகுக்கும் என இறைவனும் இறைத்ததூதரும் உத்தரவாதம் அளித்துள்ளதை இதிலிருந்து அறிகிறோம்.
திருமணத்தின் மூலம் என்ன பயன் ஏற்படும் என்று இறைவனும் இறைத்தூதரும் உத்தரவாதம் அளித்துள்ளார்களோ அது நடைமுறையில் இல்லை என பலர் புலம்புவதை காணமுடிகிறது.
உண்மை தான். இன்றைக்கு பலர் என்றைக்கு நான் திருமணம் செய்த அன்றே எனது நிம்மதி பறிபோய் விட்டது என புலம்பித் தவிக்கிறார்கள்.
இவர்களுக்கு இறைவன் வாக்களித்த நிம்மதி திருமணத்தின் மூலம் ஏற்படவில்லையே?
இன்னும் பலர் திருமணம் செய்த பிறகும் அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு திருமணம் தீமைகளிலிருந்து காக்கும் அரணாக இல்லையே? ஏன்?
எவரைத் திருமணம் செய்தாலும் இறைவன் வாக்களித்தது கிடைத்து விடாது. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என இறைவன் அறிவுறுத்தியுள்ளானோ அப்பெண்ணை மணந்தால் தான் இறைவன் வாக்களித்த மன அமைதியை, கட்டுப்பாட்டைப் பெற முடியும். அது சரி. யாரந்த மணப் பெண்?
Comments
Post a Comment