அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்

  


அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்

ஒரு பெண், மஹ்ரமான ஆணைச் சந்திக்க நேரிட்டால் அவள் தனது அலங்காரத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து திருக்குர்ஆன் சில சட்டங்களைக் கூறுகின்றது. ஒரு பெண் அந்நிய ஆடவர் ஒருவரைச் சந்திக்கும் போது, பெண்ணுக்கு நெருக்கமான, திருமனத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினர் பெண்ணுடன் இருந்தாலும் அந்த நேரத்தில் சில விதிமுறைகளைப் பேண வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்:24:31.)

நகை அணிவதும், பவுடர் போடுவதும், தலைக்குப் பூ வைத்துக் கொள்வதும், இன்னபிற சாயங்களைப் பூசிக் கொள்வதும் (மேக்கப் செட்), தலைமுடியை விரும்பியவாறெல்லாம் வடிவமைத்துக் கொள்வதும் அலங்காரம் எனலாம். விரும்பினால் உடலுக்குக் கேடு தராது எனில் உதட்டுச் சாயம் கூட ஒரு பெண் பூசிக் கொள்ளலாம். ஒரு பெண் தனது உடலில் அழகு சாதனங்களால் செயற்கை முறையில் அலங்கரித்துக் கொள்வதும் அழகை மெருகேற்றிக் கொள்வதுமே அலங்காரம் எனப்படுகின்றது.

இதுபோன்ற இயற்கை அழகை மெருகேற்றி, அலங்காரம் செய்து கொண்டால் அந்த அலங்காரத்தை யார் யார் முன்னால் காட்டிக் கொள்ளலாம் என்றும் யார் முன்னால் காட்டக் கூடாது என்றும் விதிமுறைகளை அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

Comments